காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி, அகில இலங்கை உடற்பயிற்சிப் போட்டியில் இரண்டாம் இடம்
இலங்கையின் அனைத்து மாகாணங்களின் அனைத்துக் கல்லூரிகளுக்கும் இடையில் நடைபெற்ற உடற்பயிற்சிப் போட்டிகளில், வட மாகாணத்தில் தெரிவாகி, கொழும்பில் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஒரேயொரு தமிழ் கல்லூரியாக, காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
சென்ற வார இறுதியில் கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளில், மிகச் சிறப்பாக செய்தமைக்கான விசேட பாராட்டையும் பெற்றுக்கொண்ட Kayts, St.Antony's College, கிரிக்கெட், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுப் போட்டிகளிலும், தனது அதீத வளர்ச்சியைக் காட்டி வருகிறது.
இவ்வாரம் வெளியான G.C.E. உயர்தர (A/L) தேர்தல் முடிவுகளிலும், மூன்று யு பெற்றுக்கொண்ட ஒரு மாணவன் உட்பட, பல சிறந்த பெறுபேறுகளையும் வெளிக்கொணர்ந்துள்ள இந்தக் கல்லூரி, 1990களில், சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பால் அழிந்துபோயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கல்லூரியின் புதிய அதிபராக 2000ம் ஆண்டு பொறுப்பேற்ற அருட்திரு.ஜே.ஏ.ஜேசுதாஸ் அடிகளாரின் அயராத உழைப்பால், கடந்த 5 ஆண்டுகளுக்குள், மீண்டும் ஒரு உயர்தர மதிப்பீட்டை இந்தக் கல்லூரி பெற்றுள்ளது.
பலவித பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தபோதிலும், தங்களது அயராத பயிற்சியாலும் முயற்சியாலும், வடக்கில் முதலிடம்பெற்று, அகில இலங்கை உடற்பயிற்சிப் போட்டிக்குத் தெரிவான இந்தக் கல்லூரி அணி, கொழும்பில் இரண்டாம் இடத்தைப் பெற்று, ஏராளமான பல முதல்தர பாடசாலைகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அகில இலங்கையில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவனான பீற்றர்பிள்ளை அடிகளார் உட்பட, தமிழ்தூது தனிநாயகம் அடிகள், 5ற்கும் மேற்பட்ட ஆயர்கள் உட்பட பல கல்விமான்களை உருவாக்கிய இந்தக் கல்லூரி, வருகிற வருடங்களில், வடக்கில் மிகச்சிறந்த பெறுபேறுகளை, சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் வெளிக்கொணரும் என்று இக்கல்லூரியின் அதிபர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
www.kayts-sac.com